முகநூலில் இலவசமாக சில நினைவுக் குறிப்புக்களை எழுத எனக்குப் பிடித்த அழியாத கோலங்கள் என்ற தலைப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். தொடரின் ஆரம்பத்தில் பதிவு செய்தது போல கல்வி. கலாசார, கலை, இலக்கிய. வரலாறு, சமூகம் தொடர்பாக யாரையும் காயப்படுத்தாத நான், விட்ட தவறுகளில் வௌியே சொல்லக்கூடிய, மற்றவர்களையும் என்னையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய சில விடயங்கள் இங்கு கோலமிடப்பட்டன. எதையும் அழகுணர்ச்சியோடு, தரமாக, கால அட்டவணையுடன் செய்ய வேண்டும் என்ற எனது இயல்பான உணர்வுடன் இதை தொடக்கி வைத்தவர் கே.எஸ். அனீஷா. கணினியில் அழகாக வடிவமைத்தவர் கணினி வடிவமைப்பாளர் ஜோய் வசந்தபாலன். விடுபட்ட தகவல்களை பதிந்தும் சேர்த்தும் தந்தவர் ஜவாத் மரைக்கார் அத்தோடு திக்குவல்லை கமாலும் கூட. நாள் தவறாமல் எனது முகநூலில் பதியப்பட்ட இக்கோலங்களை நூற்றுக்கணக்கானவர்கள் பாராட்டி ஊக்கமளித்திருந்தார்கள். இத்தோடு எனது பால்ய கால நண்பன் பேனா மனோகரன் மேலும் தகவல்களைத் தந்து உற்சாகப்படுத்தினார். இன்று 2015 நவம்பர் 3 ஆம் திகதி எனது 65 வயது நிறைவுபெறும் சந்தர்ப்பத்தில் இந்த இலத்திரனியல் நூல் வௌியாகின்றது.