திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.
இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.
இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.