கல்வி, இருவகைப்படும்; ஒன்று, எண்ணும் ஆற்றலைப் பெறுதல்; மற்றொன்று, பல்வேறு கருத்துக்களை அறிந்துகொள்ளுதல். மக்கட்குத் தாய்மொழியே இயல்பான கருவியாதலால், இவ்விருவகைக் கல்விக்கும் எளிதாக அது பயன்படும்; மேலும் எண்ணும் ஆற்றலைப் பெருக்குதற்குத் தாய்மொழிக் கல்வியே சிறப்பின் உரித்தாகின்றது. அதனிலும், இலக்கணப் பயிற்சியால் அவ்வன்மை மிகச் செழித்து நுணுகிக் கொழுந்தோடி வளர்கின்றது.
தமிழ்மொழியில் இலக்கண அமைப்பு இணையற்ற ஆற்றலோடும் அழகுகளோடும் அமைந்திருக்கின்றது. தமிழ்மக்கள் அவ்வகையில் தவப்பேறுடையரென்றே கூறுதல் வேண்டும். இனிய இயற்கை நெறிகளோடு தமிழ் இலக்கணத்தைத் திறம்பட விளக்கும் முழுமுதல் நூல் தமிழில் தொல்காப்பியமாகும்